நாக்கில் ஏற்படும்கரும்புள்ளிகள்–அறிகுறிகள்,காரணங்கள், மற்றும்சிகிச்சைகள்

Health Insurance Plans Starts at Rs.44/day*

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகளின் அளவானது சிறிய புள்ளிகளில் துவங்கி நன்கு தெரியும் திட்டுக்களாகவும் இருக்கலாம். புள்ளிகள், திட்டுக்கள் மற்றும் நிறமாற்றங்கள் ஆகியன நாக்கில் அவ்வப்போது ஏற்படலாம், அவை ஆபத்தானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், முக்கியமாக கவனிக்கவேண்டிய ஏதேனும் ஒரு  பிரச்சினையின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

அதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன், மருத்துவரை அணுகப் பரிந்துரைக்கப்படுகிறது, அப்போது தான் அவரால் சரியான காரணத்தைக்  கண்டறிய முடியும்.

நாக்கில் கரும்புள்ளிகள் ஏன் ஏற்படுகின்றன?

நாக்கு என்பது நமது வாயின் உள் உள்ள ஒரு தசைப் பகுதியாகும். நமது நாக்கில் சுவையறியும் உணர்திறன்  கொண்ட எண்ணற்ற நுண்ணிய ரிசெப்டார்கள் (சுவை அரும்புகள்) உள்ளன. நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஒருவேளை அவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட நிறம் இருந்தால், அல்லது அதனுடன் சேர்ந்து அரிப்பு அல்லது இதர அறிகுறிகள் தென்பட்டால், அவை ஏதேனும் ஒரு உடல்நலப் பிரச்சினை யின் அறிகுறியாக இருக்கலாம்.

நாக்கில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கான காரணங்கள்

நாக்கில் காயம் ஏற்படுதல்

நாக்கில் ஏற்படும் காயங்கள் மற்றும் ஆபரணம் அணியத் துளையிடுவது போன்ற காரணங்களால் கரும்புள்ளிகள் ஏற்படலாம். நாக்கு காயப்பட்டால் வலி ஏற்படும். நாக்கில் ஆபரணம் அணிவதற்காக ஒருவர் சமீபத்தில் நாக்கில் துளையிட்டிருந்தால், அல்லது ஏதேனும் வெட்டுக் காயம் அல்லது பிற காயங்கள் ஏற்பட்டிருந்தால், அந்த பாதிப்பின் ஒரு நிலையான அறிகுறியாக நாக்கில் கரும்புள்ளி உண்டாகலாம்..

இரசாயனங்களின் காரணமாக ஏற்படுதல்

நாக்கில் உள்ள அமிலங்களுடன் சில இரசாயனங்கள் வினைபுரியும் போது அவ்வப்போது நாக்கு கருப்பாக மாறலாம். சில மருந்துகளில் காணப்படும் பிஸ்மத் என்ற வேதிப்பொருள் நாக்கில் படும்போது அது நிற மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

முழு நாக்கும் கருப்பாக மாறும் பட்சத்தில் கூட, மாற்றம் என்பது முதலில் திட்டுகளாகவே தோன்றும். பிஸ்மத் உட்கொள்வதை அந்த நபர் நிறுத்தினால், நாக்கு வழக்கமான அதன் பிங்க் நிறத்தை திரும்பப் பெற்றுவிடும்.

நாக்கின் இயற்கையானத் தோற்றம்

இதுவரை நாக்கில் கரும்புள்ளிகளை ஒருவர் கவனிக்காமல் இருந்தால் கூட, அவை தென்படுவது என்பது பொதுவாக நிகழும் ஒரு விஷயமாகும். அடிப்படையில், நாக்கு என்பது மேற்புறத்தில் சுவை அரும்புகளால் நிரம்பியிருக்கும் ஒரு தசையாகும்.

சாப்பிடும் உணவை நமது நாக்கு வாயைச் சுற்றி நகர்த்துகிறது, அதேவேளை சுவை அரும்புகள் சுவை சார்ந்த குறிப்புகளை மூளைக்கு சிக்னல்காக அனுப்புகின்றன. சிவப்பு ஒயின் அல்லது காபி போன்றவற்றின் கறை சுவை அரும்புகளின் மீது படிந்தால், அவை மனிதக் கண்ணுக்குத் தென்படுகின்றன. அப்போது அவை, கரும்புள்ளிகள் போல் தோன்றலாம்.

அதிகப்படியான நிறமிகள் இருப்பதன்(பிக்மென்ட்டேஷன்) காரணமாக நாக்கில் கருந்திட்டுகள் அல்லது புள்ளிகள் ஏற்படலாம். ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் மற்றும் கீமோதெரபி காரணமாக ஏற்படும் கரும்புள்ளிகள், சிகிச்சை முடிந்த பல வாரங்களுக்குப் பிறகு பொதுவாக மறைந்துவிடுகின்றன.

உடைந்த பற்களின் காரணமாக ஏற்படுதல்

ஏதேனும் பல் உடைந்திருந்தால் அதன் காரணமாக நாக்கில் கருந்திட்டுக்கள் ஏற்படலாம். நாக்கினை நமது பற்களே கடிக்கும் சாத்தியம் உள்ளது, இதனால் ஏதேனும் தொற்று அல்லது நிறமாற்றம் ஏற்படலாம்.

நாக்குப் புற்றுநோய்

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் சில நேரம், புற்றுநோய் போன்ற மோசமான நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். கருமையாக தென்படும் பகுதிகள் ஆறாத காயங்கள் அல்லது சிரங்குகள் போலவும் இருக்கும். நாக்கில் கட்டிகள், வீக்கம் மற்றும் விழுங்குவதில் பிரச்சினைகள் ஏற்படுவது நாக்குப் புற்றுநோயின் மற்ற அறிகுறிகளாகும்.

மேற்கூறிய அறிகுறிகளில் எதனாலும் அவதியுற்றால், அந்த நபர் உடனடியாக  மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். நாக்குப் புற்றுநோய் என்பது ஆபத்தான பாதிப்பாக இருந்தாலும், சீக்கிரமாக சிகிச்சை பெறுவது நல்ல பலன்களைத் தரும்.

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள், லுகோபிளாக்கியா  (leukoplakia) என்கிற நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம், இது புற்றுநோய் பாதிப்பின் முந்தையக் கட்டத்தைக் குறிக்கலாம். 

ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (squamous cell carcinoma) என்பது  நாக்குப் புற்றுநோயின் மிகவும் பொதுவான ஒரு வகையாகும். பொதுவாக, இது ஒரு புண் அல்லது சிரங்கு போலத் தோன்றும், ஆனால் இது ஆறாமல் அப்படியே இருக்கும். இந்த திட்டுகள் நாக்கில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

நாக்கில் முடி போன்று வளர்தல் (ஹேரி டங்)

நாக்கின் மீது அடர் நிறம், கருப்பு அல்லது பழுப்பு நிற திட்டுகள் காணப்பட்டு, அவை நாக்கில் முடிவளர்ந்தது போல இருந்தால் – அது ‘பிளாக் ஹேரி டங்’ என்று அழைக்கப்படுகிறது. இறந்த சரும அணுக்கள் சரியாக நாக்கைவிட்டு நீங்காததே இதற்கு பொதுவான காரணமாகும். 

பராமரிக்காமல் வாய்ப்பகுதியை மோசமாக வைத்திருப்பது, மருந்துகள் மற்றும் புகையிலை பயன்பாடு ஆகிய இதர காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். பெண்களை விட ஆண்களிடம் இந்த பாதிப்பு பொதுவாகக் காணப்படுகிறது.

தினமும் டூத்பிரஷ் மற்றும் டூத் ஸ்க்ராப்பர் கொண்டு வாய்ப்பகுதியை தூய்மையாக பராமரிப்பதன் மூலம் கருப்பான, முடி வளர்ந்தது போல காணப்படும் நாக்கு பாதிப்பினை சரிசெய்யலாம். மற்ற முறைகள் பலனளிக்காத பட்சத்தில், பல் மருத்துவர்கள் அல்லது மருத்துவ நிபுணர்கள் பிரத்தியேக சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி நாக்கினை சுத்தம் செய்யலாம்.

முடிகளுடன் நாக்கு கருப்பாக தென்பட்டால் அவசியம் கவனம் செலுத்த வேண்டும். நாக்கின் மீது எல்லா இடங்களிலும் இருக்கும் பாப்பிலரி வடிவமைப்புகள் வெறும் கண்களால் பார்க்கும் போது தெரியாது. ஆனால், அவற்றின் மீது இறந்த அணுக்கள் (செல்கள்) சேரும்போது தெளிவாகப் பார்க்க முடியும்.

இந்த பாப்பிலே காண்பதற்கு கருப்பாகவும் முடி போன்றும் இருக்கும், காரணம், அவை உணவிலும், அருந்தும் பானங்களிலும் உள்ள நிறங்களால் கறைபடிகின்றன.  பெரும்பாலும் இந்த பிரச்சினை  தாமாகவே சரியாகிவிடும், ஆனால் கீழ்வரும் சூழ்நிலைகளில் இந்த பாதிப்பு தாமாக சரியாகாது.

 • உமிழ்நீர் உற்பத்தி குறைதல்
 • மருந்துகளின் பக்கவிளைவுகள்
 • அதிகமாக திரவங்களை அருந்துதல்
 • ஆக்ஸிடைஸ் செய்யும் மவுத் வாஷ்களை பயன்படுத்துதல்
 • தேநீர் அல்லது காபி போன்ற பானங்களை அருந்துவது

நாக்கில் ஆபரணம் அணிவது

நாக்கினைக் குத்திக்கொண்டு அதில் ஆபரணம் அணிபவர்களின் நாக்கில் பெரும்பாலும் இந்த கரும்புள்ளிகள் காணப்படும். நாக்கிற்கு அதன் இயல்பான நிறத்தைத் தரும் மெலனின் இழப்பு ஏற்படுவதன் காரணமாக அவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு, நாக்கு அதன் நிறத்தை திரும்பப் பெற்றுவிடும். ஒருவேளை அப்படி பெறவில்லை என்றால், அந்த நபருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.

நாக்கில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கான பிற காரணங்கள்:

நாக்கினால் அதன் பழைய செல்களை அகற்ற முடியாமல் போகும் பட்சத்தில், அதன் மீது அழுக்கு சேர்ந்து, நீங்கள் சாப்பிடும் உணவுகள் அல்லது அருந்தும் பானங்களில் இருந்து நிறமாற்றம் அடையலாம்.

ஆன்டிபயாட்டிக் மருந்துகள்: உங்களது உடல்நலம் பாதிக்கப்படும்போது, உங்களைத் தேற்ற இந்த மருந்துகள் உதவுகின்றன. ஆனால், அவை உங்கள் வாயில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கிருமிகள் இரண்டையும் கொன்றுவிடுகின்றன. சிலநேரம் இவை உங்கள் வாயில் சில கிருமிகளை அதிக அளவில் வளரச்செய்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உங்களது நாக்கில் கரும்புள்ளிகள் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.

புகையிலை: புகைபிடிப்பது அல்லது புகையிலையை மெல்லுவதால் நாக்கு கருப்பாகலாம். புகையிலை உங்கள் பற்கள் மற்றும் நாக்கில் கறைகளை எளிதில் படியச்செய்யும்.

காபி அல்லது தேநீர் அருந்துதல்: காபி மற்றும் தேநீரை அடிக்கடி பருகினால், நாக்கின் பாப்பிலாவின் மீது எளிதாக கறைபடியும்.

மவுத்வாஷ்கள்: ஆக்ஸிடைஸிங் காரணிகள் உள்ள கடுமையான மற்றும் சக்திவாய்ந்த மவுத்வாஷ்கள், உங்கள் நாக்கினை கருப்பாக்கலாம் மற்றும் வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

மருந்துகள்: இரைப்பை குடல் சார்ந்த (கேஸ்ட்ரோஇன்ட்டஸ்டினல்) சில மருந்துகளில் உள்ள பெப்டோ-பிஸ்மால் (Pepto-Bismol) (Bismuth Subsalicylate) உங்கள் வாயில் உள்ள சல்ஃபருடன் வினைபுரிந்து நாக்கினை கருப்பாக தோற்றமளிக்க செய்கிறது.

நாக்கில் கரும்புள்ளிகள் ஏற்படுவதன் அறிகுறிகள்

நாக்கு கருப்பாக மாறுவது டார்க் டங் எனப்படுகிறது, ஆனால் நிறமாற்றம் என்பது பிரவுன், வெள்ளை, அல்லது மஞ்சள் நிறமாகவும் கூட இருக்கலாம். பொதுவாக நாக்கின் நடுப்பகுதியில் இந்த நிறமாற்றம் அதிகம் ஏற்படுகிறது.

சிலருக்கு எப்போதும் இந்த பாதிப்பின் மற்ற அறிகுறிகள் தென்படுவதில்லை. நாக்கில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு முன்பு பின்வரும் குறியீடுகள் மற்றும் அறிகுறிகள் தென்படும்.

 • வாயில் துர்நாற்றம்
 • குமட்டல் 
 • எரிச்சல் உணர்வு
 • உணவின் சுவையில் மாறுதல் தெரிவது
 • வாயை அழுத்தி மூடுவது போன்ற உணர்வு
 • கூசுவது போன்ற உணர்வு

நாக்கில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கான இதர அறிகுறிகள் மற்றும் குறியீடுகள் பின்வருமாறு:

 • நாக்கில் வலி எற்படுதல்
 • காதில் வலி ஏற்படுதல்
 • தொண்டை அல்லது கழுத்தில் கட்டி ஏற்படுதல்
 • விழுங்குவதில் சிரமம் ஏற்படுதல்

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகளை கண்டறிவது எப்படி?

பொதுவாக பிளாக் டங் பாதிப்பை ஒரு மருத்துவர் நேரடியாகப் பார்த்து கண்டறிந்துவிடுவார்.ஒருவேளை மருத்துவருக்கு சந்தேகம் இருப்பின், உறுதிசெய்வதற்காக  கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ளக் கோருவார்.

தேவையான கூடுதல் பரிசோதனைகள் பின்வருமாறு,

 • பாக்டீரியா கல்ச்சர் ஆய்வுக்கான உமிழ்நீர் (ஸ்வாப்) சோதனை 
 • பூஞ்சை சோதனை

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் சில வாரங்களைக் கடந்தும் நீடித்தால், அது ஏற்பட்டதற்கான காரணம் தெரியாத பட்சத்தில், மருத்துவ உதவியை நாடவேண்டும்.

வாய், கழுத்து அல்லது தொண்டையில் வலி அல்லது கட்டிகள் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்,  முன்னதாக உட்கொண்ட மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் பற்றி மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியமாகும்.

நோயாளருக்கோ அல்லது குடும்பத்தினர் எவருக்கும் முன்னதாக புற்றுநோய் இருந்திருந்தால், அதுபற்றிய தகவலையும், புகைபிடித்தல் மற்றும் மது பழக்கம் பற்றியும் அவர் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பெரும்பாலான புண்கள் தீங்கற்றவையாகவும், தானாகவே மறைந்துவிடும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்; நாக்கு  அல்லது வாயின் பிற இடங்களில் உள்ள சில புண்கள் மற்றும் புடைப்புகள் புற்றுநோயாக இருக்கலாம்.

நோயாளருக்கு நாக்குப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர் சந்தேகப்பட்டால், எக்ஸ்ரே அல்லது PET ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சந்தேகத்திற்கிடமான திசுக்கள் தீங்கானதா இல்லையா என்பதை பயாப்ஸி செய்வதன் மூலமாகவும் மருத்துவர் கண்டறியலாம்.

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கான சிகிச்சைகள்

பற்களை நன்கு சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம் நாக்கில் கருந்திட்டுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். பிரஷ் அல்லது ஸ்கிராப்பரைக் கொண்டு நாக்கை சுத்தம் செய்வதன் மூலம், உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை அதன் மேற்பரப்பில் இருந்து நீக்கலாம்.

வாய் துலக்கிய பிறகு புள்ளிகள் மறைந்துவிட்டால், மேற்படி சிகிச்சை தேவையில்லை. புள்ளிகள் இருப்பது தொடர்ந்தால், பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யவும். முடிந்தவரை, நாக்கை கருப்பாக்கும் பொருட்கள் அல்லது சிகிச்சைகளைத் தவிர்க்கவும்.

வழக்கமாக உட்கொள்ளும் உணவுகள் அல்லது குடிக்கும் பானங்களால் நாக்கில் நிறமாற்றம் ஏற்பட்டால் – மதுபானம், காபி அல்லது தேநீர் போன்றவற்றைக் குறைப்பது போன்ற உணவுமுறை மாற்றங்களைச் செய்வது பயன் தரும்.

பெராக்சைடு உள்ள மவுத்வாஷ்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மருத்துவ நிபுணர் நோயாளருக்குப் பரிந்துரைக்கலாம்.

இதுபோன்ற காரணிகளை சரிசெய்வது அல்லது தவிர்ப்பதால் மட்டுமே நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் எல்லா நேரத்திலும் நீங்கிவிடாது. அதுபோன்ற சூழ்நிலையில், மருத்துவர் ரெட்டினாய்டு அல்லது பூஞ்சை எதிர்ப்பு மருந்தை நோயாளருக்குப் பரிந்துரைக்கலாம். சில அரிதான சூழலில் லேசர் அறுவை சிகிச்சை அவசியமாகலாம்.

நாக்கில் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமில்லை. இருப்பினும், இப்பாதிப்பு ஏற்படும் ஆபத்தை குறைக்க சில யுக்திகள் உள்ளன

 • புகைபிடித்தல் அல்லது புகையிலை தயாரிப்புகளைத் தவிர்த்தல்
 • மிகக் குறைவாக மதுபானம் அருந்துவது
 • பல் பரிசோதனைகளை வழக்கமாக மேற்கொள்வது
 • நாக்கு மற்றும் வாயில் ஏதேனும் புதிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது. 
 • நாக்கில் புள்ளிகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், மருத்துவரிடம் அதற்குரிய ஓரல் கேர் மருந்துகளை  பரிந்துரைக்குமாறு கோரவும்.

வாய்ப்பகுதியின் சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் நாக்கில் ஏற்படும் கருந்திட்டுகளை பெரிதளவில்  தவிர்க்கலாம்.

வாய்ப்பகுதியின் சுகாதாரத்திற்கான தினசரி நற்பழக்கங்களுக்கு சில உதாரணங்கள் இதோ:

 • உங்களது பற்களைத் துலக்கவும் மற்றும் நாக்கிலிருந்து இறந்த தோல் செல்களை நீக்க, டங் ஸ்கிராப்பரை பயன்படுத்தவும்.
 • சாப்பிட்ட பின்பு பல் துலக்கவும்.
 • தேநீர், காபி, போன்றவற்றை அருந்திய பிறகு மவுத்வாஷ் கொண்டு வாயைக் கழுவவும்.
 • புகைபிடிப்பதை நிறுத்துவது உட்பட அனைத்து விதத்திலும் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதால் – சிறந்த முறையில் பல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம், மற்றும் நாக்கில் உள்ள கரும்புள்ளிகளையும் குறைக்கலாம்.
 • தினமும் பற்களை ஃப்லாஸ் செய்யவும்.
 • விரிவான முறையில் பற்களை சுத்தப்படுத்தவும்.
 • இறந்த தோல் செல்களை அகற்றுவதற்கு தண்ணீர் உதவுவதால், சீராக திரவங்களைப் பருகவும்.

முடிவுரை

பொதுவாக நாக்கில் ஏற்படும் கரும்புள்ளி என்பது மோசமான ஒரு பிரச்சினை அல்ல. சில நேரங்களில், நாக்கின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றம் மட்டுமே நோயாளிக்கு தென்படும் ஒரே அறிகுறியாக இருக்கலாம். நாக்கில் ஏற்பட்ட கரும்புள்ளிகளை அகற்ற விரும்பும் ஒருவருக்கு, வாயின் சுகாதாரத்தை மேம்படுத்துவது முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.

பல் துலக்கும் போது, ​​நாக்கையும் துலக்க பரிந்துரைக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். நாக்கைக் கழுவிய பின், அந்தக் கரும்புள்ளிகள் போய்விட்டால், அவர்களுக்கு கூடுதல் சிகிச்சை எதுவும் தேவைப்படாது.

இருப்பினும், வாயில் அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் அவசியம் கவனம் செலுத்த வேண்டும். நாக்கில் கரும்புள்ளிகள் தொடர்ந்தால், மற்றும் கட்டிகள் அல்லது வீக்கம் போன்ற கூடுதல் அறிகுறிகள் தென்பட்டால் தவறாமல் மருத்துவரை அணுகவேண்டும்.

FAQs

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் சாதாரணமான ஒன்றா?

சில நேரங்களில் நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் கவலைக்குரியதாக இருக்கலாம். எப்போதாவது நாக்கில் உண்டாகும் கறைகள், புள்ளிகள் அல்லது திட்டுகள் பாதிப்பில்லாததாக இருந்தாலும், ஒரு பல் மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரால் மட்டுமே அவற்றின் சரியான காரணத்தைக் கண்டறிய முடியும்.

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் தாமாக மறைந்துவிடுமா?

கரும்புள்ளிகள் பெரும்பாலும் தாமாகவே மறைந்துவிடும். இருப்பினும், நாக்கில் ஏற்படும் சில புண்கள், ஏற்கனவே ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கும் சாத்தியம்  உள்ளதால், அதனை உடனடியாக மருத்துவரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.

ஆரோக்கியமான நாக்கு காண்பதற்கு எப்படி இருக்கும்?

ஆரோக்கியமான ஒருவரது நாக்கு இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்திலும், பாப்பிலே எனப்படும் சிறய முகடுகளாலும் நிறைந்தும் காணப்படும்.

நாக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் எதனைக் குறிக்கின்றன?

நாக்கில் கரும்புள்ளிகள் ஏற்பட்டால், அது – நாக்கில் காயம், நாக்குப் புற்றுநோய், உடைந்த பற்கள், அல்லது சிலநேரம் ஹேரி டங் எனப்படும் நாக்கில் முடி வளர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைக் குறிக்கலாம். சில இரசாயனங்கள் நாக்குடன் வினைபுரிவதையும் கூட அவை குறிக்கலாம்.

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் எவ்வளவு காலம் இருக்கும்?

நாக்கில் கரும்புள்ளி ஏற்படுவதால் ஆபத்தில்லை. வாழ்க்கைமுறையில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் பாதிப்பின் அறிகுறிகளில் விரைவான முன்னேற்றங்களைக் காணலாம். சிகிச்சைக்குப் பின்பு ஒன்று அல்லது இரண்டு வாரங்களைக் கடந்தும் நாக்கில் கரும்புள்ளிகள் இருப்பது தொடர்ந்தால், மருத்துவரை ஆலோசிப்பது கட்டாயமாகும்.


DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top