சர்க்கரை நோய்க்கான உணவுமுறை திட்டம்–  மற்றும்நீரிழிவு நோயாளர்களுக்கான சிறந்த இந்திய உணவுகளின் விளக்கப்படம்

Health Insurance Plans Starts at Rs.44/day*

சிறந்த ஆரோக்கியத்திற்காக ஒரு நீரிழிவு (சர்க்கரை) நோயாளர் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை நோய்க்கும், உணவுக்கும் உள்ள தொடர்பை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

மேற்கூறிய அனைத்து கருத்துகளையும் ஒருவர் புரிந்து கொண்டால் மட்டுமே, ஒரு உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

நீரிழிவு நோயைப் புரிந்துகொள்வது

நீரிழிவு நோய் பொதுவாக சர்க்கரை நோய் (டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்) என்று அழைக்கப்படுகிறது. இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது ஏற்படும் நோயாகும்.

கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது, அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் திறம்பட பயன்படுத்த முடியாதபோது ஏற்படும் ஒரு நாள்பட்ட கோளாறு என நீரிழிவு நோயை உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுக்கிறது. சர்க்கரை நோய் என்பது ஒரு வாழ்க்கை முறைக் கோளாறு ஆகும், உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு இது வழி வகுக்கக் கூடும்.

இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை என்பது நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படும் ஆற்றலின் ஒரு முக்கிய ஆதாரமாகும்.

நீரிழிவு நோயை ஒரு வாக்கியத்தில் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் – இது ஒரு வளர்சிதை மாற்ற (மெட்டபாலிக்) பாதிப்பாகும், நீண்ட காலத்திற்கு உடலில் அதிக இரத்த சர்க்கரை அளவுகளை தக்கவைப்பதைக் கொண்டு இது வகைப்படுத்தப்படுகிறது.

நீரிழிவு கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தலாம். அவை

 • இருதய நோய்கள்
 • பக்கவாதம்
 • கால் புண்
 • நரம்பு பாதிப்பு
 • சிறுநீரக பாதிப்பு
 • கல்லீரல் பாதிப்பு
 • கண்கள் பாதிக்கப்படுதல்
 • பல்வேறு உறுப்புகள் செயலிழத்தல்
 • அறிவாற்றல் குறைபாடு மற்றும்
 • மரணம்

நீரிழிவு நோயை சில வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு:

 • முன் நீரிழிவு நோய் (Pre Diabetic) நீரிழிவு நோய் என்று வகைப்படுத்துவதற்கு முன் ஏற்படும் நீரிழிவு
 • டைப் 1 நீரிழிவு நோய்
 • டைப் 2 நீரிழிவு நோய்
 • கர்ப்பகால சர்க்கரை நோய்

ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும், ஆனால் டைப் 2 நீரிழிவு நோயாகக் கண்டறிவதற்குப் போதுமான அளவு சர்க்கரை அளவு எட்டப்படாமல் இருப்பதே முன் நீரிழிவு நோய் எனப்படும்.

டைப் 1 நீரிழிவு நோய் என்பது ஒரு ஆட்டோஇம்யூன் நோயாகும். இதில் சொந்த உடலின் நோயெதிர்ப்பு அமைப்பே, கணையத்தில் இருக்கும் இன்சுலின் உற்பத்தியாகும் செல்களைத் தாக்குகிறது.

டைப் 2 நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவதன் விளைவாகவும், இன்சுலினை எதிர்க்கும் சக்தி அதிகரிப்பதாலும் கூட ஏற்படுகிறது.

கர்ப்ப காலத்தில் உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது கர்ப்பகால நீரிழிவு நோய் எனப்படும்.

ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவருக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படும்

 • அதிக பசி மற்றும் தாகம்
 • திடீர் எடை இழப்பு
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • சோர்வு
 • பார்வை குறைபாடு
 • புண்கள் ஆறுவதற்கு அதிக நேரம் எடுத்தல்.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள் யாவை?

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலால் சரியாக பயன்படுத்த முடியாமல் போகும் போது, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு முக்கிய காரணம் மர்மமாகவே உள்ளது, ஆனால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு மரபணு காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஒரு பெரிய பங்கினை வகிக்கின்றன.

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் சில காரணிகள்:

 • போதிய இன்சுலின் உற்பத்தி இல்லாதது
 • இன்சுலின் எதிர்ப்புத்தன்மை
 • மரபணுக்கள்
 • ஹார்மோன்கள்
 • உடல் பருமன்
 • மோசமான உணவு மற்றும்
 • போதிய உடற்பயிற்சி இல்லாதது

உடல் இன்சுலின் உற்பத்தி செய்யும் திறனை இழப்பது தான், டைப் 1 சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணமாகும். இரத்த சர்க்கரையை உடல் முழுவதும் நகர்த்துவதற்கு தேவையான ஒரு ஹார்மோன் தான் இன்சுலின். இன்சுலின் உற்பத்தி அல்லது அதனைத் தடுப்பதில் இடையூறு ஏற்படும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்.

அதுபோல், உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யப்பட்டு, ஆனால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடல் செயல்பாட்டிற்கான எரிபொருளாக செல்களுக்குள் நகர்த்தும் திறனை உடல் இழந்து போகும் போது – டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோய், உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவதன் விளைவாகவும், இன்சுலினை எதிர்க்கும் சக்தி அதிகரிப்பதாலும் கூட ஏற்படுகிறது.

இன்சுலின் தவிர, ஒரு நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை தீர்மானிப்பதில் மரபியல் காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கணையத்தை சேதப்படுத்தும் மற்றும் நீரிழிவு நோயின் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் சில மரபணு காரணிகளும் உள்ளன.

மக்களுக்கு வயதாகும்போது டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகும் அபாயமும் ஏற்படுகிறது. குறைவான உடற்பயிற்சி மற்றும் எடை அதிகரிப்பு காரணமாக, வயதாகும்போது சர்க்கரை நோய் வரும் சாத்தியம் உள்ளது. உடல் பருமன் என்பது இன்சுலின் எதிர்ப்பை தூண்டும். கொழுப்பு செல்கள் வீக்கத்தை ஏற்படுத்தலாம், அது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்.

ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவர் தேர்ந்தெடுக்கும் உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை அளவு நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஒரு நபருக்கு இருப்பது எந்த வகையான நீரிழிவு நோயாக இருந்தாலும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்.

ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு நோய்

ஊட்டச்சத்தியல் என்பது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றிய கல்வியாகும். ஊட்டச்சத்துக்களைப் பற்றி படிப்பதால், உடல் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும், மற்றும் உணவுமுறை ஆரோக்கியம் மற்றும் அதனோடு தொடர்புடைய நோய்களுக்கு இடையே ஒரு நல்லுறவு ஏற்படுவதை உறுதி செய்கிறது. ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது ஒரு நபரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுத்தும் அபாயத்தை குறைக்கும்.

உணவை பல்வேறு ஊட்டச்சத்துக்களின் வகைகளாக பிரிப்பது நமது உடலின் தேவைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

 • கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து)
 • புரதம்
 • கொழுப்பு
 • வைட்டமின்
 • மினரல்கள் (தாதுக்கள்)
 • நார்ச்சத்து (ஃபைபர்) மற்றும்
 • தண்ணீர்

மேற்கூறிய ஊட்டச்சத்து வகைகள் ஒரு சமச்சீர் ஊட்டச்சத்துக்களின் மிக முக்கியமான கூறுகளாககும். சமச்சீரான ஒரு உணவை உருவாக்க அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருப்பது அவசியம். அவற்றை மேலும் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் மைக்ரோநியூட்ரியண்ட்ஸ் என இருவகைப்படுத்தலாம். மேலே குறிப்பிட்ட அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரிவிகித அளவில் கொண்ட உணவைத் தேர்ந்தெடுப்பதையே சமச்சீரான உணவை (பேலன்ஸ்டு டயட்) உட்கொள்வது என்று நாம் கூறுகிறோம்.

கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கார்ப்ஸ் என்கிற மாவுச்சத்து உணவில் இருக்கும் சர்க்கரையின் மூலக்கூறுகளாகும். கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக உடைக்கும் வகையில் நமது உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடலின் ஆற்றலுக்கு குளுக்கோஸ் முக்கிய ஆதாரமாகும். கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்படும் குளுக்கோஸ் உடலால் பின்னர் பயன்படுத்தப்படுகிறது.

புரதங்கள் நமது உடலின் பில்டிங் பிளாக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஆரோக்கியமான உணவில் புரதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனது. இந்த அமினோ அமிலங்களைக் கொண்டே நமது உடல் – தசை எலும்புகளை உருவாக்கி, சீராக்குகிறது, மற்றும் ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களையும் உற்பத்தி செய்கிறது.

கொழுப்பு என்பது கொழகொழப்பான ஒரு திசுவாகும், இது ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாக உள்ளது. கொழுப்பினை, நல்ல கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு என வகைப்படுத்தலாம். LDL கொலஸ்ட்ரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியன நுண்ணூட்டச்சத்துக்கள் (மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ்) ஆகும், அவை உடலின் வழக்கமான செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியமாகும். இந்த வைட்டமின்கள் மற்றும் மினரல்களை நமது உடல் உற்பத்தி செய்வதில்லை; நாம் உட்கொள்ளும் உணவிலிருந்தே அவை பெறப்படுகிறது.

உடல் ஆரோக்கியம் பெற இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் நாம் சரிசம விகிதத்தில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் என்ன சாப்பிடுகிறார் என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். தவறான உணவை உட்கொள்வதால் உடலில் இரத்ததில் உள்ள சர்க்கரையின்அளவு அதிகரித்து, நாளடைவில் நீரிழிவு நோய்க்கு அப்பழக்கம் வழிவகுக்கும்.

சர்க்கரை நோயாளர்களுக்கான உணவு திட்டம்

நீரிழிவு நோய் வந்த பிறகு அது சார்ந்த சுய மேலாண்மை, கல்வி மற்றும் சிகிச்சைத் திட்டமிடல் ஆகியவற்றுடன், தனிப்பட்ட உணவுத் திட்டத்தை பின்பற்றுவதில் தவறாமல் ஈடுபாடு காட்டவேண்டும். உலகின் நீரிழிவு தலைநகராக இந்தியா இருப்பதால், நீரிழிவு நோயாளர்கள் நீரிழிவு உணவு அட்டவணையைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது, ஏனெனில் இது இரத்த குளுக்கோஸ் அளவைப் பராமரிக்கவும் நீரிழிவு நோயின் அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது.

சர்க்கரை நோயாளர்களுக்கான சிறந்த இந்திய உணவு அட்டவணை

சர்க்கரை (நீரிழிவு) நோயாளர்கள் தங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க சிறிய அளவுகளில், அடிக்கடி உணவு உட்கொள்ளலாம். உணவைத் தவிர்ப்பது பலனளிக்காமல் போகலாம், ஏனெனில் இது ஒரு சிலருக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவை (ஹைபோகிளைசிமியா) ஏற்படுத்தக்கூடும். சர்க்கரைக் குறைவு என்கிற அதே காரணத்திற்காக, இரவுநேர ஹைபோகிளைசிமியாவைத் தடுப்பதற்காக, இரவு உறங்குவதற்கு முன் ஏதேனும் பானங்கள்/சிற்றுண்டியை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவரது வயது, உயரம், எடை, உடற்செயல்பாட்டின் அளவு மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் போன்ற காரணிகளை உள்ளடக்கி ஒரு உணவுத் திட்டமானது பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகிறது.

குறிப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள உணவு அட்டவணை பொதுவான ஒன்றாகும். ஒரு தகுதிவாய்ந்த உணவியல் நிபுணரால் மட்டுமே, ஒரு குறிப்பிட்ட நீரிழிவு நோயாளருக்கான பிரத்தியேகமான  உணவுத் திட்டத்தை உருவாக்க முடியும்.

7 – நாள் உணவுத் திட்டம்

நாள் 1

உணவு நேரம்உணவுப் பட்டியல்
அதிகாலை (6 AM)இலவங்கப்பட்டை தண்ணீர் – 1 கிளாஸ்
காலை உணவு (8 AM)உடைத்த கோதுமை உப்மா – 1 கப், க்ரீன் சட்னி – 1 டேபிள் ஸ்பூன்
நண்பகல் (11 AM)மோர் – 1 கிளாஸ்
மதிய உணவு (1 PM)முட்டை சப்பாத்தி / பன்னீர் / சப்பாத்தி – 2 , தக்காளி வெங்காய சப்ஜி – 1 கப்
மாலை (4 PM)வேகவைத்த கொண்டைக்கடலை – 1 கப்
இரவு உணவு (7 PM)குதிரைவாலி தோசை – 2, வெஜ் சாம்பார் – ½ கப்
உறங்கும் முன்பு (இரவு 9 மணி)பால் (சர்க்கரை இல்லாமல்) – 1 கிளாஸ்

நாள் 2

உணவு நேரம்உணவுப் பட்டியல்
அதிகாலை (6 AM)பால் (சர்க்கரை இல்லாமல்) – 1 கிளாஸ்
காலை உணவு (8 AM)காய்கறி தோசை – 2 , புதினா சட்னி – ½ கப்
நண்பகல் (11 AM)தக்காளி சூப் – 1 கப்
மதிய உணவு (1 PM)எலுமிச்சை சாதம் – 1 கப், பச்சை இலை கொண்ட காய்கறி சாலட் – 1/2 கப் , முட்டையின் வெள்ளைக்கரு – 1
மாலை (4 PM)கேரட் & வெள்ளரி துண்டுகள் – 1 கிண்ணம்
இரவு உணவு (7 PM)கீரை சப்பாத்தி – 2, வெஜ் கிரேவி – ½ கப்
உறங்கும் முன்பு (9 PM)இலவங்கப்பட்டை குடிநீர் – 1 கிளாஸ்

நாள் 3

உணவு நேரம்உணவுப் பட்டியல்
அதிகாலை (6 AM)பாதாம் – 6
காலை உணவு (8 AM)கம்பு தோசை – 2 , சாம்பார் – ½ கப்
நண்பகல் (11 AM)வெள்ளரி – 1
மதிய உணவு (1 PM)சாதம் – 1 கப், பருப்பு – 1/2 கப், கீரை சாலட் – 1/2 கப், குடைமிளகாய் காய்கறி – 1/2 கப், முட்டையின் வெள்ளைக்கரு – 1
மாலை (4 PM)முளைவிட்ட பயிர்கள் – 1 கிண்ணம்
இரவு உணவு (7 PM)பலவகை தானியங்கள் சப்பாத்தி – 2, பட்டாணி கிரேவி – 1/2 கப்
உறங்கும் முன்பு (9 PM)மூலிகை வெண்ணெய்பால் – 1 கிளாஸ்

நாள் 4

உணவு நேரம்உணவுப் பட்டியல்
அதிகாலை (6 AM)வெந்தயக் குடிநீர் – 1 கிளாஸ்
காலை உணவு (8 AM) கேழ்வரகு இட்லி – 2, தக்காளி சட்னி – ½ கப்
நண்பகல் (11 AM)பச்சை தேநீர் – 1 கப்
மதிய உணவு (1 PM)சப்பாத்தி -2, சோயா கிரேவி – 1/2 கப், பருப்பு – 1/2 கப்,
முட்டையின் வெள்ளைக்கரு ஆம்லெட் – 1
மாலை (4 PM)நட்ஸ் (பாதாம் (2) + வால்நட்ஸ் (3) + பரங்கி விதைகள் (1 தேக்கரண்டி))
இரவு உணவு (7 PM)கொள்ளு தோசை – 2, பீர்க்கங்காய் சட்னி – 2 டேபிள்ஸ்பூன்
உறங்கும் முன்பு (9 PM)மஞ்சள் பால் (சர்க்கரை இல்லாமல்) – 1 கிளாஸ்

நாள் 5

உணவு நேரம்உணவுப் பட்டியல்
அதிகாலை (6 AM)பால் (சர்க்கரை இல்லாமல்) – 1 கிளாஸ்
காலை உணவு (8 AM)எலுமிச்சை அவல் உப்மா – 1 கப், குடைமிளகாய் சட்னி – 1 டேபிள்ஸ்பூன்
நண்பகல் (11 AM)காய்கறி சூப் – 1 கப்
மதிய உணவு (1 PM)பட்டாணி புலாவ் – 1 கப், பச்சை சாலட் – 1/2 கப், புடலங்காய் ரைத்தா – 1
கிண்ணம், முட்டையின் வெள்ளைக்கரு – 1
மாலை (4 PM)முளைவிட்ட பச்சை பயிறு – 1 கிண்ணம்
இரவு உணவு (7 PM)சப்பாத்தி – 2, பாலக்கீரை கிரேவி – 1/2 கப் 
உறங்கும் முன்பு (9 PM)இலவங்கப்பட்டை குடிநீர் – 1 கிளாஸ்

நாள் 6

உணவு நேரம்உணவுப் பட்டியல்
அதிகாலை (6 AM)வால்நட் – 6
காலை உணவு (8 AM)பச்சை பயிறு தோசை – 2, வெஜ் சாம்பார் – ½ கப்
நண்பகல் (11 AM)வெள்ளரி துண்டுகள் – 1, கிண்ணம்
மதிய உணவு (1 PM)கைக்குத்தல் அரிசி சாதம் – 1 கப், சாம்பார் – 1/2 கப், கீரை சப்ஜி – 1/2 கப்,
முட்டையின் வெள்ளைக்கரு – 1
மாலை (4 PM)பச்சை தேநீர் – 1 கப்
இரவு உணவு (7 PM)ஓட்ஸ் இட்லி – 2, தக்காளி சட்னி – 2 டேபிள்ஸ்பூன்
உறங்கும் முன்பு (9 PM)கொழுப்பு நீக்கிய பால் (சர்க்கரை இல்லாமல்) – 1 கிளாஸ்

நாள் 7

உணவு நேரம்உணவுப் பட்டியல்
அதிகாலை (6 AM)பாதாம் – 6
காலை உணவு (8 AM)காய்கறி தோசை – 2, கொத்தமல்லி சட்னி – ½ கப்
நண்பகல் (11 AM)வெண்ணெய்பால் – 1 கிளாஸ்
மதிய உணவு (1 PM)சாதம் – 1 கப், பருப்பு – 1/2 கப், வேகவைத்த வெண்பூசணி – 1/2 கப், முட்டையின் வெள்ளைக்கரு – 1
மாலை (4 PM)நட்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்
இரவு உணவு (7 PM)கீரை புல்கா – 2, காய்கறி கிரேவி – 1/2 கப்
உறங்கும் முன்பு (9 PM)பால் (சர்க்கரை இல்லாமல்) – 1 கிளாஸ்

நீரிழிவு நோயாளர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

நீரிழிவு நோயாளர்களுக்கான சைவ உணவு திட்டம்

1.முழு தானியங்கள்

காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளான முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்த உணவு ஆதாரங்களாகும். அவை குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI) காரணமாக நீரிழிவு மற்றும் இரத்தக் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. கைகுத்தல் அரிசி, ஓட்ஸ், ரவை மற்றும் முழு கோதுமை ஆகியவை முழு தானியங்களின் சில எடுத்துக்காட்டுகளாகும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மற்றொரு அற்புதமான உணவு தான் சிறுதானியங்கள். குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட இவற்றில், அதிக நார்ச்சத்து உள்ளது, மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க இவை உதவுகின்றன.

2. நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகள் புரதம், ஜீரண நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாகும். பல வகையான நட்ஸ்கள்ஆன்ட்டிஆக்ஸிடன்ட்  பண்புகளையும் கொண்டுள்ளன. சரியான அளவில் இவற்றை உட்கொள்வது எடை குறைத்து, இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பின் அளவை பராமரிக்க உதுவுகிறது. வால்நட், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்கள் நீரிழிவு நோய்க்கு உகந்தவை, மற்றும் ஆளி விதைகள், பூசணி விதைகள், சியா விதைகள் நீரிழிவு நோயாளர்க்கு அதிக சத்தான உணவுகளாகும்.

3. முழு பருப்பு வகைகள் மற்றும் பசும் (அவரை) பருப்பு வகைகள்

முழுப் பயிர்களில் அதிகளவில் புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை நீரிழிவு நோய்க்கு ஏற்றவையாகும். கொண்டைக்கடலை, பாசிப்பயிறு, மைசூர் பயறு மற்றும் கிட்னி பீன்ஸ் ஆகியவை முழு பருப்பு வகைகள் மற்றும் பசும் பருப்புகளுக்கு சில  உதாரணமாகும்.

4. பச்சை இலை காய்கறிகள்

ஆன்ட்டிஆக்ஸிடன்ட் நிறைந்த இவை மற்றொரு அற்புத உணவாகும். குறைந்த GI உணவுகளான இவற்றில் அதிக மெக்னீசியம் உள்ளது, குறைந்த கலோரி மதிப்புடையவை மற்றும் உயர்தர புரதத்தின் வளமான மூலாதாரமாகும். பச்சைக் காய்கறிகளான கீரை, முருங்கைக் கீரை, அமரந்த், மற்றும் புதினா போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. நீரிழிவு நோயாளர்கள், நீரிழிவு நோயைத் தவிர மற்ற சிக்கல்கள் இல்லாத பட்சத்தில், பச்சையான அனைத்து கீரைகளையும் சாப்பிடலாம்.

5. காய்கறிகள்

அனைத்து நீர் சார்ந்த காய்கறிகள் மற்றும் பொதுவான காய்கறிகள் நீரிழிவு நோய்க்கு நல்லதாகும். அவை நீண்ட நேரம் வயிற்றை நிரம்பிய நிலையில் வைத்து, பசியைத் தூண்டாமல் இருக்கும். காய்கறிகளில் குறைந்த அளவே மாவுச்சத்து உள்ளதால், இது நீரிழிவு நோயாளர்களுக்கு ஏற்ற உணவாக அமைகிறது.  அனைத்து விதமான சுரைக்காய் வகைகள், கத்தரிக்காய் மற்றும் காலிஃபிளவர் ஆகியவை இதற்கு உதாரணமாகும்.

6. பால் மற்றும் பால் பொருட்கள்

நீரிழிவு நோயாளர்கள், குறைந்த கொழுப்புள்ள அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் கொழுப்பு நீக்கப்படாத பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலிலும் உள்ளது; மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள பால் எடை குறைப்பிற்கு ஏற்றது மேலும், அவற்றின் குறைந்த கலோரி அளவின் காரணமாக இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க ஏற்றதாகவும் இருக்கும். அதுபோல், குறைந்த கொழுப்புள்ள பாலில் இருந்து பெறப்பட்ட பால் பொருட்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

7. இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இன்சுலினை உணரும் திறனை அதிகரிப்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் ஆரோக்கியமான நல்ல பலன்களைத் தருகிறது. இலவங்கப்பட்டை குடிநீர் நச்சுகளை அகற்றவும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது; இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை எரித்து, எடை குறைப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

8. இளநீர்

புத்துணர்வு தரும் இளநீரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்  நிரம்பி உள்ளன, அதிக நார்ச்சத்தும், குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸும் உள்ளது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, மற்றும் எடை குறைப்பிற்கு உதவுகிறது, இது நீரிழிவு நோயாளர்களுக்கு சிறந்த பானமாகும்.

பல்வேறு நன்மைகள் இருந்தபோதிலும், இது சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடுமோ என்கிற குழப்பம் நீரிழிவு நோயாளர்களுக்கு உள்ளது.

சமீபத்திய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஆய்வாளர் திரு. பெஸ்வானி, அவர்களது கூற்றுப்படி – வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் நீரிழிவு நோயாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு இளநீரை (தேங்காய் இல்லாமல்) பருகலாம் என்று கூறுகிறார். அதனால் குளுக்கோஸ் அளவுகள் எந்த விதத்திலும் அதிகரிக்காது. அதிக கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் இளநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இளநீர் இரத்த சர்க்கரை அளவுகளில் உடனடியாக ஏற்ற இறக்க மாறுதல்களை ஏற்படுத்தும்.

இளநீர் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான பானமாகும். இருப்பினும், நீரிழிவு நோயுடன் சிறுநீரக நோய் உள்ளவர்கள், பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளர்களுக்கான அசைவ உணவுத் திட்டம்

1. முட்டை

முட்டைகள் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய சிறந்த உயர்தர புரத உணவுகளில் ஒன்றாகும். முட்டை வயிற்றை நிரப்புவதோடு, குளுக்கோஸை உறிஞ்சுவதையும் குறைத்து, நீரிழிவு நோயாளர்களுக்கு சாதகமான உணவாக இருக்கும். முட்டைக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயம் இல்லாததால், ஒரு நாளைக்கு ஒரு முழு முட்டை சாப்பிடுவது உகந்தது. இருப்பினும், முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்வதில் எந்த வரம்பும் கிடையாது, இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் புரதம் நிறைந்த, குறைந்த கலோரி கொண்ட உணவாகும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் காரணமாக, அதனை ஒரு நாளைக்கு ஒன்று என்ற அளவில் மட்டுமே சாப்பிடலாம்.

2. மீன்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 ஆகிய ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரமாக மீன் உள்ளது. மீன்கள் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நரம்பியல் போன்ற பிரச்சனைகளின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

3. கொழுப்பு குறைவான இறைச்சி

கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால், லீன் மீட் எனப்படும் கொழுப்பு குறைவான இறைச்சியானது நீரிழிவு நோயாளர்களுக்கான சிறந்த அசைவ உணவுகளில் ஒன்றாகும். அதிக கொழுப்புள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவை கடுமையாக உயர்த்தக் கூடும், அதே நேரத்தில் லீன் மீட் குறைந்த கொழுப்புடன் சரியான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

4. தோல் இல்லாத கோழி

தோல் இல்லாத கோழியில், முழு கோழியை விட குறைவான அளவே சாச்சுரேட்டட் கொழுப்பு இருக்கும்; ஆனால் அதே அளவு புரதம் இதில் கிடைக்கும். அசைவ உணவு உண்ணும் நீரிழிவு நோயாளர்களுக்கு இது சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது இரத்த குளுக்கோஸ் அளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது.

5. கடல் பிராணிகள்

கடல் பிராணிகளைப் பொருத்தவரை அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் இயற்கையான ஆதாரமாக இருக்கின்றன; அவற்றில் கொழுப்பும் குறைவாக இருப்பதால் இரத்த குளுக்கோஸ் அளவை நிலைப்படுத்த உதவும். அவை இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கவும், நீரிழிவு நோயின் பக்க விளைவுகளை குறைக்கவும் உதவுகின்றன.

நீரிழிவு நோயாளர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

1. சுத்திகரிக்கப்பட்ட மாவு & இன்ஸ்டன்ட் தானியங்கள்

சுத்திகரிக்கப்பட்ட மாவுகள் என்பன எளிமையான கார்போஹைட்ரேட் வகையாகும், அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன; உடனடி தானியங்களைப் போலவே இவையும் அதிக பதப்படுத்தப்பட்டவையாகும் மற்றும் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸையும் கொண்டுள்ளன. இவற்றில் குறைந்த அளவிலான ஊட்டச்சத்துக்களே உள்ளதால் உணவை விரைவாக உடைத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. மைதா, நூடுல்ஸ், பீட்சா பேஸ், இனிப்புகள், பிஸ்கட் போன்றவை இவற்றிற்கு உதாரணமாகும்.

2. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்பது பதப்படுத்தப்பட்ட வெள்ளை சர்க்கரையாகும். சர்க்கரையை உண்பதற்கும், மற்றும் ஹைப்பர் கிளைசீமியா (சர்க்கரை அளவு அதிகரித்தல்) ஆகியவற்றுக்கும் இடையேயான நேரடி தொடர்பை, எந்தவொரு முறையான ஆராய்ச்சியும் நிறுவவில்லை. இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிக அளவில் உட்கொள்வது எடை கூடுவதற்கு வழிவகுக்கிறது; இது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை ஏற்படுத்துவதால், இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கிறது. பொதுவாகவே சர்க்கரையை உட்கொள்வது பல வளர்சிதை மாற்றக் கோளாறுகள், மற்றும் இருதய நோய்களுக்கு வழிவகுப்பதில் முன்னோடியாக இருக்கிறது.

3. வேர்கள் மற்றும் கிழங்குகள்

உருளைக்கிழங்கு, வள்ளிக் கிழங்கு, கொலோகாசியா, கேரட், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி ஆகியவை வேர் வகைகள் மற்றும் கிழங்குகளுக்கு உதாரணமாகும். வேர்கள் மற்றும் கிழங்குகளில் பொதுவாக அதிக மாவுச்சத்தும், குறைந்த அளவிலேயே மற்ற ஊட்டச்சத்துக்களும் இருக்கும். இந்த வேர்கள் மற்றும் கிழங்குகளை சமைப்பதால், அவற்றில் உள்ள மாவுச்சத்தும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் அதிகரித்து, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது. பச்சை கேரட் அல்லது பிற வேர்கள் மற்றும் கிழங்குகளை அவ்வப்போது உட்கொள்வது பரவாயில்லை.

4. பழங்கள்

அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட பழங்களை உட்கொள்வதை நீரிழிவு நோயாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும். வாழைப்பழம், மாம்பழம், பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை ஆகியவை அவற்றில் சிலவாகும். இவற்றில் உள்ள பிரக்டோஸ் என்ற இயற்கையான சர்க்கரை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உயர்த்துகிறது. பழச்சாறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் சர்க்கரை எளிய சர்க்கரைகளாக உடைந்து இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.

5. முழு பால் பொருட்கள்

கொழுப்பு நீக்கப்பட்ட பாலுடன் ஒப்பிடும் போது, ​​கொழுப்பு நீக்கப்படாத பாலில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது, ஆனால் இரண்டிலும் ஒரே அளவிலான கால்சியம் கிடைக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த கொழுப்பு நீக்கப்படாத பாலை அளவுடன் உட்கொள்வதால் நீரிழிவு நோயாளர்கள்  அந்நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

6. சோடியம் நிறைந்த உணவுகள்

உப்பு, ஊறுகாய், அப்பளம், கேனில் வரும் உணவுகள், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், வேகவைத்த பொருட்கள், உடனடி சூப்கள், சாஸ்கள், மயோனைஸ், சிப்ஸ் மற்றும் வறுத்த சிற்றுண்டிகள் ஆகியவை அதிக சோடியம் நிறைந்த உணவுகளில் சேரும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, பிற இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

7. சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் அதிக சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது, அதே நேரத்தில் இருதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

8. கார்பனேட் செய்யப்பட்ட பானங்கள்

பாட்டிலில் அடைக்கப்பட்ட இந்த குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கிறது, இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென உயர்த்துகிறது. கார்பனேற்றப்பட்ட பானங்களை அருந்துவது பல்வேறு நோய்களுக்கும் முன்னோடியாக உள்ளது.

9. தேங்காய்

தேங்காயில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை. தேங்காயை அதிகமாக உட்கொள்வது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், சமச்சீர் உணவுடன் அவ்வப்போது உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

ஆரோக்கியம் என்று வருகையில் உணவின் முக்கியத்துவத்தை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது. ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அவரவருக்கு ஏற்ற உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.

முடிவுரை

சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் போது ஏற்படும் ஒரு நோயாகும். தவறான உணவை உட்கொள்வதால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, நாளடைவில் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.

நீரிழிவு நோயாளர்கள் தங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க சிரிதளவில், அடிக்கடி உணவை உட்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது ஒரு நபரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பல்வேறு நோய்களின் அபாயங்களைக் குறைக்கிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கான பிரத்தியேக உணவுத் திட்டத்துடன், சர்க்கரை நோய் குறித்த சுய மேலாண்மை, கல்வி மற்றும் திட்டமிட்ட சிகிச்சைகள் ஆகியவற்றில் தங்களைத் அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.


DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top